தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 May 2018 9:45 PM GMT (Updated: 22 May 2018 8:43 PM GMT)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்து இருக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்களும், வணிகர்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளாகிய இன்று (நேற்று) 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவத்துக்கு அரசின் மெத்தன போக்கே காரணம். எனவே அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தை நிறுத்தவேண்டும். முழுமையான நச்சுத்தன்மை குறித்த விவரங்களை உடனடியாக ஆராய்ந்து, அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்.

தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (இன்று) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நியாயம் கிடைக்காத பட்சத்தில் பேரமைப்பின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தை கூட்டி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story