சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் வீட்டில் ரூ.30 லட்சம் தங்கம்-வைர நகைகள் கொள்ளை


சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் வீட்டில் ரூ.30 லட்சம் தங்கம்-வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 27 Jun 2018 11:15 PM GMT (Updated: 27 Jun 2018 11:15 PM GMT)

சென்னை நுங்கம்பாக்கத்தில், டாக்டர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டாக்டர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் கவுசிக் (வயது 40). இவர் நுங்கம்பாக்கத்தில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகுதிநேர டாக்டராக வேலை செய்கிறார். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர்.

கடந்த 12-ந் தேதி அன்று இவர் குடும்பத்தோடு இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் சென்றுவிட்டார். நேற்று அதிகாலையில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டில் உள்ள ஒரு அறையில் அலமாரியில் வைத்திருந்த தங்கம்-வைர நகைகளும், ரூ.2 லட்சமும் கொள்ளை போயிருந்தது. தங்கம்- வைர நகைகள் வைத்திருந்த அலமாரியின் சாவியை, பூஜை அறையில் வைத்திருந்தனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பூஜை அறையில் இருந்த சாவியை எடுத்து, அலமாரியை திறந்து அதற்குள் இருந்த நகைகளையும், ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர். பின்பக்க கதவையும் உடைக்கவில்லை. நகை வைக்கப்பட்டிருந்த அலமாரியையும் உடைக்கவில்லை.

இதுபற்றி டாக்டர் கவுசிக் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி ஆகியோர், கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். வீட்டிற்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கண்காணிப்பு கேமராக்கள் மாற்றி வைக்கப்பட்டிருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளை போன நகைகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 வைர நெக்லஸ்கள், 5 ஜோடி வைர கம்மல்கள் மற்றும் வைர கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்கள் போன்றவற்றை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் வெளியில் உள்ள கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஏனென்றால் பூஜை அறையில் சாவி வைக்கப்பட்டிருந்த விஷயம் வெளியாட்கள் யாருக்கும் தெரியாது. நகை வைக்கப்பட்டிருந்த அலமாரி மட்டும் திறந்து, நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களால் போலீசாருக்கு, வீட்டில் வேலைபார்க்கும் 4 வேலைக்காரர்கள் மீதும், காவலாளி மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வேலைக்காரர்களிடமும், காவலாளியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி வரை இருக்கும் என்று முதலில் தகவல்கள் வெளியானது. பின்னர் கணக்கிட்டு பார்த்த பிறகு ரூ.30 லட்சம் வரை இருக்கும் என்று டாக்டர் கவுசிக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச்சம்பவம் நுங்கம்பாக்கத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story