சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை


சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை
x
தினத்தந்தி 22 Aug 2018 12:15 AM GMT (Updated: 22 Aug 2018 12:02 AM GMT)

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தினால், மறு உத்தரவு வரும் வரை அந்த நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை விதிப்பதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்தது.

சென்னை,

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏராளமான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக நிலங்களை அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் என்.எல்.ராஜா, தியாகராஜன், வக்கீல்கள் கே.பாலு, கனகராஜ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது, 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி அட்வகேட் ஜெனரல் அதை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த துண்டு பிரசுரத்தை படித்து பார்த்த நீதிபதிகள், ‘இந்த துண்டு பிரசுரத்தில் விவசாயிகளின் பயத்தை போக்கும் விதமாக எந்த விளக்கமும் இடம் பெறவில்லையே? 8 வழிச்சாலை திட்டம் சிறப்பானது என்று திட்டத்தை தான் புகழந்து கூறப்பட்டு இருக்கிறது. மேலும், ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. அதற்கு பதிலாக வைக்கப்படும் மரங்களை முறையாக தண்ணீர் ஊற்றி வளர்ப்பது இல்லை. அதனால் அந்த மரங்களும் வளருவது இல்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்கு அட்வகேட் ஜெனரல், ’இந்த திட்டத்துக்காக நிலத்தின் உரிமையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மாட்டோம் என்று இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நாள் முதலே தமிழக அரசு சார்பில் நான் விளக்கம் அளித்து வருகிறேன். நிலங்கள் எல்லாம் அதன் உரிமையாளரின் வசம்தான் உள்ளது. நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை’ என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தினால், ஆர்ஜிதம் செய்யப்படலாம் என்று கருதப்படும் நிலங்களின் உரிமையாளர்கள் ஒரு விதமான அச்சத்தில் உள்ளனர். தங்களை வலுக்கட்டாயமாக அரசு வெளியேற்றி விடும் என்று அஞ்சுகின்றனர். ஆனால், அரசு அவ்வாறு செய்யாது என்று தமிழக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்த ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறது. அதாவது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும், அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் (அடுத்த மாதம்) 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராகி விசாரணையை கவனித்தார்.

விசாரணை முடிந்ததும், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அரசு மேற்கொள்ளும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டம், நாட்டின் வளர்ச்சித்திட்டம் கிடையாது. அதனால் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அரசுக்கு உள்நோக்கம் உள்ளது. இதனால், 5 மாவட்ட மக்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு பொதுமக்களிடமும், நீதிமன்றத்திடமும் தவறான தகவலை கொடுத்து வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால உத்தரவு மக்களுக்கு ஆதரவாக இருக்கும். இனி இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகுவோம். 18 கிராம சபை கூட்டத்தில் இந்த திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட தீர்மானத்தை ஆட்சியாளர்கள் தடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story