நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ. மழையும், மேல் பவானியில் 19 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னக்கால்லார் பகுதியில் 13 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கூறினார்.
Related Tags :
Next Story