சுதந்திர தின விழாவையொட்டி: சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 75 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு


சுதந்திர தின விழாவையொட்டி: சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 75 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 7:16 PM GMT (Updated: 12 Aug 2019 7:16 PM GMT)

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும், 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீர் பிரச்சினையையொட்டி, பயங்கரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்றும், இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.

இதையொட்டி தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி சுழற்சி முறையில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையிலும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை மறுநாள்(வியாழக்கிழமை) சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்துகிறார். இதையொட்டி நடைபெறும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிடுகிறார்.

சுதந்திர தின விழா நடைபெறுவதையொட்டி, சென்னை கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கோட்டையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். உள்ளூர் போலீசார், கமாண்டோ படை போலீசார், அதிவிரைவு படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் போலீசார் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோட்டையில் ஏற்கனவே 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி மேலும் 15 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 75 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஆளில்லா விமானங்கள் மூலமும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். இதுதவிர சென்னை முழுவதும் பாதுகாப்பு அரண் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திர தின விழா முடியும் வரை வாகன சோதனை நடைபெறும். லாட்ஜ்கள் உள்ளிட்ட தங்கும் விடுதிகளிலும் சோதனை தீவிரமாக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story