டெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்:  மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Oct 2019 11:52 AM IST (Updated: 6 Oct 2019 11:52 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது.  வேலூரில் கே.வி. குப்பம் பகுதியில் தர்ஷினி மற்றும் மைத்ரேயி ஆகிய சகோதரிகள் இதனால் பாதிப்படைந்தனர்.  இதேபோன்று  தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் உள்பட 11 பேருக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது.  டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் குதர்க்கமாக பேசியது கண்டிக்கத்தக்கது என கூறினார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தகவலை அரசு முழுமையாக வெளியிடவில்லை.  காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  பேனர் விவகாரத்திற்கு நீதிமன்றம் சென்ற தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் செல்லவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story