குடிமராமத்து திட்ட பணிகளால் இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தமிழக அரசு தகவல்


குடிமராமத்து திட்ட பணிகளால் இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 11 Nov 2019 11:15 PM GMT (Updated: 11 Nov 2019 10:09 PM GMT)

குடிமராமத்து திட்ட பணிகளால் இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் முன்னரே குறுகிய கால அவகாசத்தில் எல்லா நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு முதல் இதுவரை நீர்நிலைகளை அளந்து கல் பதிக்கும் பணிகள் 1,624 எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளது. 1,068 இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பணிகள் நடைபெற்ற 4,474 இடங்களில் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

2,635 ஏரிக்கரைகள் பலப் படுத்தும் பணிகளும், 1,598 நீர்வரத்து வாய்க்கால்கள், 118 நீர்விநியோக வாய்க்கால்கள் புதுப்பிக்கும் பணிகள், 633 கால்வாய்கள் சீரமைத்தல், 1,405 ஏரிகளில் தூர்வாரும் பணிகள், 1,124 கால்வாய்கள் சீரமைப்பு பணிகள், 2,615 மதகுகள் சீர்படுத்தும் பணிகள், 1,329 மதகுகள் புதியதாக அமைக்கும் பணிகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றுள்ளன.

கூடுதலாக 16 லட்சம் ஏக்கர்

851 இடங்களில் உபரிநீர் வெளியேறும் கலிங்குகள் சீரமைக்கும் பணிகளும், 127 அணைக்கட்டுகள் சீரமைக்கும் பணிகளும், மேலும் 1,116 இதர பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 1 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 1 கோடியே 18 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் நீர்நிலைகள் நிறைந்து வரும் சூழ்நிலையில், பருவமழையும் சரியான நேரத்தில் பெய்து வருவதால் இந்த ஆண்டு உணவு உற்பத்தி மட்டுமல்லாமல் தண்ணீரிலும் தமிழ்நாடு தன்னிறைவு பெறுகிறது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இத்திட்டம் குறித்து விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்கள் கூறும்போது, ‘குடிமராமத்து திட்ட பணிகளினால் இந்த ஆண்டு நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. அனைத்து நீர்வரத்து வாய்க்கால்கள் மற்றும் நீர் வினியோக கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை உள்பட அனைத்து அணைகளிலும் நீர்நிரம்பி, தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கடைமடைவரை தண்ணீர் சென்று நடவுப்பணிகள் முடிந்துள்ளன. இதனால் வேளாண்மை உற்பத்தி கூடுதலாக கிடைக்கும். சிறப்புமிக்க இந்த குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story