அதிமுகவினர் தனது தந்தையை கடத்தியதாக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15,000 அபராதம்


அதிமுகவினர் தனது தந்தையை கடத்தியதாக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15,000 அபராதம்
x
தினத்தந்தி 9 Jan 2020 12:53 PM GMT (Updated: 9 Jan 2020 12:53 PM GMT)

திமுக கவுன்சிலரான தனது தந்தையை அதிமுகவினர் கடத்தியதாக வழக்கு தொடர்ந்தவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரூ.15,000 அபராதம் விதித்துள்ளது.

மதுரை,

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டுக்கு திமுக வேட்பாளரான சாத்தையா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சாத்தையா கடந்த 3-ம் தேதி காணாமல் போனதாக அவரது மகன் ராஜா போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தனது தந்தையை கடத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜா வழக்கு தொடரந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கவுன்சிலர் சாத்தையாவை 9 ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் கவுன்சிலரை ஆஜர்படுத்த தவறினால் ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சாத்தையா, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் மகள், மருமகனுடன் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார். 

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் தவறான தகவல்களை கூறியதற்காக கவுன்சிலர் சாத்தையாவின் மகன் ராஜாவுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story