திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறக்கமாட்டார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்


திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறக்கமாட்டார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 12 Jan 2020 8:04 AM GMT (Updated: 12 Jan 2020 8:04 AM GMT)

திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8 ஆம் தேதி பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்பது மோசமான வாய்ப்பாகும்.

எனினும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறி, அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது;-

“எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்த ஸ்டாலினின் கருத்து கண்டனத்திற்குரியதாகும். காவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளார் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

Next Story