தி.மு.க. ஆட்சியில் டெல்டா விவசாயிகளை பாதுகாக்கவில்லை - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்


தி.மு.க. ஆட்சியில் டெல்டா விவசாயிகளை பாதுகாக்கவில்லை - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 10:31 PM GMT)

சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து விரைவில் தனி சட்டம் இயற்றப்படும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

சேலம் மாவட்டம், தலைவாசலில் கடந்த 9-ந்தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழாவில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதை செயல்படுத்திட சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து, வழிமுறைகளை ஆராய்ந்து, இதற்கான ஒரு தனிச் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு இந்த அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்ற அறிவிப்பினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அறிவிப்புடன் நிற்காமல், மத்திய அரசு இந்த அறிவிப்பிற்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்குமாறு மத்திய மந்திரிக்கு, மறுநாளே, முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார். டெல்லிக்கு சென்று, சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியிடம் நேரடியாக அக்கடிதத்தை நானே வழங்கினேன்.

அரசின் இந்த துணிச்சலான அறிவிப்பை, டெல்டா மாவட்டம் மட்டும் அல்லாது மாநிலத்தின் அனைத்துப் பகுதி விவசாய பிரதிநிதிகளும், பத்திரிகைகளும், அரசியல் பிரபலங்களும், வரவேற்று வருகின்றனர்.

விவசாயிகள் நலன் காக்கும் அரசின் இந்த அறிவிப்பினை வரவேற்காமல், அரசுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருவது கண்டு பொறுக்க முடியாமல், உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் அரசின் முடிவினை விமர்சித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும், அரசு ஒரு போதும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்காது என்று, சட்டமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, பல முறை முதல்-அமைச்சர் வலியுறுத்தி வந்தார். தற்போது டெல்டா பகுதியில் புதியதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதை தடை செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி தான் தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் இத்திட்டத்திற்கு வித்திட்டது. 1996-ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை மந்திரி டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010-ல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார். அதே போல ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப் பணி தொடங்க 4 ஆண்டுகளுக்கு ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது தி.மு.க. அரசு தான். அதுவும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தான், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், இத்திட்டத்திற்கான அனைத்து உதவியையும் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அப்போதைய தி.மு.க. அரசு கூறியது.

டெல்டா விவசாயிகளை அன்று பாதுகாக்க தவறிய தி.மு.க. மைனாரிட்டி அரசு, இன்று அரசு துணிச்சலுடன் எடுத்த நடவடிக்கைக்கு கிடைத்த வரவேற்பினை கண்டு பொறுக்க முடியாமல், எதிர்க்கட்சி தலைவரும், அவரது சகாக்களும், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று, என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியாக, மக்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்ட விவசாய மக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் இவர்களது உள்நோக்கம் நன்றாக தெரியும்.

அரசின் அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கும் நிலையில், அதுபற்றி எதிர்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசின் அறிவிப்பை எதிர்ப்பதாகவே உள்ளது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது என்றும் மக்களால் பார்க்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக மு.க.ஸ்டாலின் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய தனிச்சட்டம், ஜெயலலிதாவின் மக்கள் நல அரசால் விரைவில் இயற்றப்படும். அரசு செய்வதைத்தான் சொல்லும். சொல்வதைத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story