முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சந்திப்பு


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Feb 2020 7:25 PM GMT (Updated: 16 Feb 2020 7:25 PM GMT)

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்க்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அப்போது கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பிற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி தெகலான் பாகவி செய்தியாளர்களிடம் பேசிய போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மத்திய அரசிடம் தெளிவான விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

Next Story