போலீஸ் தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கேட்டு 15 பேர் ஐகோர்ட்டில் வழக்கு


போலீஸ் தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கேட்டு 15 பேர் ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2020 12:00 AM GMT (Updated: 18 Feb 2020 11:27 PM GMT)

சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2-ம் நிலை காவலர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நிர்வாகம் நடத்திய குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய போலீஸ் தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் உள்பட 15 பேர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை வார்டன்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் என்று மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.

பின்னர், எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துவிட்டது. கடந்த 2-ந் தேதி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இவர்களில் பலர் முறைகேடுகள் செய்து தேர்வாகி உள்ளனர்.

தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற ‘கட் ஆப்’ மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. எனவே, இந்த தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.

சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகளை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முறைகேடுகளைவிட, சீருடை பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story