அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 19 Feb 2020 11:45 PM GMT (Updated: 2020-02-20T04:44:08+05:30)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரை கைவிடுவது என்ற முடிவை கடந்த மாதமே தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள், நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கியதில் பெருந்தொகை ஊழல் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதே கோரிக்கையுடன் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலாளர் சார்பில் பொதுத்துறை இணைச் செயலாளர் எம்.வெள்ளைச்சாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொடுத்த புகார்களை பரிசீலித்த பொதுத்துறை, ஆரம்பகட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த இரு புகார்களிலும், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்ததால், ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு பொன்னி இரு மாநகராட்சிகளிடம் இருந்தும் அனைத்து ஆவணங்களையும் வரவழைத்து ஆய்வு செய்தார். ஒப்பந்த பணிகள் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதா? என்று விசாரித்தார்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கை அவ்வப்போது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 23-ந்தேதி ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கைக்கு தலைமைச் செயலாளர் கடந்த ஜனவரி 13-ந்தேதி ஒப்புதல் அளித்தார். பின்னர் அந்த அறிக்கை விஜிலென்ஸ் கமிஷனருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த விஜிலென்ஸ் கமிஷனர், ஜனவரி 18-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்று தெரியவந்ததால் அவருக்கு எதிரான புகார்களை கைவிடுவது என்று ஜனவரி 22-ந்தேதி தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழக அரசு இந்த முடிவை எடுத்ததால் அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்யவேண்டும். அதேநேரம், அரசின் இந்த முடிவை எதிர்த்து அறப்போர் இயக்கம் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் வி.சுரேஷ், ‘இந்த வழக்கில் சாட்சியாக உள்ள ஒரு ஒப்பந்ததாரரை சிலர் மிரட்டியுள்ளனர். அமைச்சருடன் அதிகாரிகளும் கூட்டுச்சேர்ந்து செயல்படுகின்றனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி அமைச்சரின் முகவர் போல செயல்படுகிறார்’ என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘அறப்போர் இயக்கத்துக்கும், தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பொதுநல வழக்கு என்ற பெயரில் அரசியல்ரீதியாக போர் நடத்த இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஐகோர்ட்டின் அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன்? அவ்வாறு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டது யார்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்களை கைவிடுவதாக அரசு எடுத்த முடிவை கடந்த மாதம் 23-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் தெரிவிக்கவில்லை? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

விஜிலென்ஸ் கமிஷனர் அனுப்பிய அறிக்கையை தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக் கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story