மத நல்லிணக்கத்துக்கு எதிரான வதந்திகளை நம்பாதீர்கள்; சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி


மத நல்லிணக்கத்துக்கு எதிரான வதந்திகளை நம்பாதீர்கள்; சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 2 March 2020 5:30 AM IST (Updated: 2 March 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத நல்லிணக்கத்துக்கு எதிரான வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மருத்துவ கல்லூரி கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். அத்துடன் பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.474 கோடியே 30 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்து 21 ஆயிரத்து 105 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இந்த விழாவில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ., கருணாஸ் எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து சமய நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர். இந்த அற்புதமான மாவட்ட மண்ணிலே புதிய மருத்துவ கல்லூரிக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. அந்த 11 அரசு மருத்துவ கல்லூரிகளில், முதல் அடிக்கல் நாட்டு விழா காண்கின்ற மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம்.

சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 6 அரசு மருத்துவ கல்லூரிகள், 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன் தொடங்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, கடந்த 8 ஆண்டுகளில் 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசை வலியுறுத்திய காரணத்தினால்தான், குறுகிய காலத்தில், 11 புதிய மருத்துவ கல்லூரிகளை, மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு பெற்றுள்ளோம்.

300 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்ட மருத்துவமனைகளை இணைத்து, புதிய மருத்துவ கல்லூரிகள் நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஒரு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கான செலவு 325 கோடி ரூபாயாகும்.

ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் 2021-2022-ம் கல்வி ஆண்டு முதல், தலா 150 மாணவர் சேர்க்கையுடன், புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கும், இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலரை நியமனம் செய்தும், கட்டிட பணிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இரண்டாவது கட்டமாக, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு, கட்டிட பணிகளுக்காக தேவையான நிதியும் ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. சமீபத்தில், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களில், புதியதாக அரசு மருத்துவ கல்லூரி தொடங்க, மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு உள்ளது.

இவ்வாறு 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சுமார் 4,500 முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் அனுமதி பெற்று சாதனை படைத்து இருக்கிறோம். இதற்காக 2020-2021-ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 3,250 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன், 2021-2022-ம் கல்வி ஆண்டு முதல் 1,650 புதிய மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழ்நாடு. மதச் சார்பின்மையை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது நமது மாநிலம். இங்கு வாழும் அனைத்து சமயத்தினரும் சகோதரர்களாக பழகி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், அனைத்து சமயத்தினரையும் பாதுகாக்கும் ஒரு மத நல்லிணக்க அரசாகவும், சிறுபான்மையின மக்களுக்கு அரணாகவும் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. இனியும், சிறுபான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக விளங்கும். இதையே நான் சட்டமன்றத்திலும் தெரிவித்து உள்ளேன்.

ஆனால் சமீப காலங்களில் இதனை கண்டு பொறுக்காதவர்கள், அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் சந்தேகப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு’ என்றார் மகாகவி பாரதியார். சில கட்சியினரின் பொய் பிரசாரத்திற்கு செவி சாய்க்காமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். இதனை கூறும்போது, எனக்கு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு காட்டிற்கு அருகில் இருந்த ஊரில், இரண்டு ஆடுகள் தோழமையுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன. இந்த ஆடுகளின் ரத்தத்தை ருசிக்க விரும்பிய ஒரு நரி, சில நாட்கள் அந்த ஆடுகளை நோட்டமிட்டு வந்தது. அந்த ஆடுகள் எப்போது பிரிந்து தனியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நரி, ஒரு நாள் தனியாக இருந்த அதில் ஒரு ஆட்டிடம் சென்று, நீயும், உன் நண்பனும் உணவு உண்ண நீ ஒருவனே கஷ்டப்படுகிறாய்; மற்றொரு ஆடு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. உனக்கு கஷ்டமாக இல்லையா? என்று கேட்டு, அந்த ஆட்டின் மனதில் விஷமத்தை உண்டாக்கியது.

இதே போன்று மற்றொரு ஆட்டிடமும் சென்று இதே எண்ணத்தை கூறியது. ஒரு கட்டத்தில் அந்த ஆடுகளின் மனதில் தாம்தான் கஷ்டப்படுகிறோம் என்ற எண்ணம் தோன்றவே, இரண்டு ஆடுகளும் ஒரு நாள் சண்டையிட்டுக்கொண்டன. பின்னர் அவை மிகவும் சோர்வடைந்து ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டன.

இதை கவனிக்காமல், இரண்டு ஆடுகளும் அங்கிருந்து சென்று விட்டன என்று எண்ணிய அந்த நரி, அங்கு சிந்தி இருந்த ரத்தத்தை ருசித்துக்கொண்டிருந்தது. இதை இரண்டு ஆடுகளும் பார்த்து விட்டன. பின்னர் அவ்விரண்டு ஆடுகளும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டபோதுதான், நரியின் விஷமப்பிரச்சாரம், அந்த ஆடுகளுக்கு தெரிய வந்தது.

இதனால் விழித்துக்கொண்ட அந்த ஆடுகள் ஒரு திட்டத்துடன் மீண்டும் சண்டையிடுவது போல் அங்கு வந்து மோதிக்கொள்ள தயார் ஆயின. அந்த நேரத்தில் ஏதோ சமாதானம் செய்ய வந்தது போல் அங்கு வந்த நரியை, இரண்டு ஆடுகளும் சேர்ந்து முட்டித்தள்ளி விரட்டியடித்து அந்த நரிக்கு பாடம் புகட்டின.

அதேபோல் மக்களிடையே பிளவு ஏற்படுத்திட யார் முயன்றாலும், இந்த அரசின் முயற்சிகளாலும், உங்களது ஒத்துழைப்பினாலும், அது முறியடிக்கப்படும். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை பின்பற்றி, தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழும் என்பதை நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த விழா முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் சென்றார். அங்கு மாலையில் நடைபெற்ற விழாவில் விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். அத்துடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் அவர் பேசுகையில், சிவகாசி நகராட்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

Next Story