2023-ல் தொடங்க திட்டம் இந்தியா-ஜப்பான் இணைந்து நிலவு குறித்து ஆய்வு இஸ்ரோவின் விஞ்ஞானிகள் தகவல்


2023-ல் தொடங்க திட்டம் இந்தியா-ஜப்பான் இணைந்து நிலவு குறித்து ஆய்வு இஸ்ரோவின் விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2020 5:15 AM IST (Updated: 16 Jun 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஜாக்ஸா உடன் இணைந்து 2023-ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க இருக்கிறது.

சென்னை,

இந்தோ-ஜப்பானிய நாடுகளின் உறவுகள் விரிவடைந்து வரும் நிலையில் ஒரு பெரிய ஊக்கமாக, இரு நாடுகளும் நிலவு துருவ ஆய்வு என்ற கூட்டு நிலவு பணியை தொடங்க உள்ளன. இதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) ஆரம்ப கட்டப்பணிகளில் களம் இறங்கி உள்ளன.

இஸ்ரோவும், ஜாக்ஸாவும் சேர்ந்து முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க உள்ளன. இந்த பணி 2023-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்க இருக்கிறது.

நிலவில் தரையிறங்கும் தொகுதி மற்றும் ரோவரை ஜாக்ஸா உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லேண்டர், ரோவர்

அதே நேரத்தில் லேண்டர் அமைப்பை இஸ்ரோ உருவாக்க இருக்கிறது. லேண்டர் மற்றும் ரோவரை ஜப்பானின் ஜாக்ஸா உருவாக்கும் எச்-3 ராக்கெட்டில் பொருத்தி, ஜப்பானில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த திட்டம் குறித்து 2018-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த போது அரசு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த பணிகளுக்கான மேலாண்மை திட்டம், விண்கல அமைப்பு தேவைகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

‘ககன்யான் திட்டம்?

இதற்கிடையில், தற்போது இஸ்ரோ, நாட்டின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

வருகிற 2022-ம் ஆண்டில் இந்தியா தனது 75 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும் போது இந்த திட்டத்தை அடையவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story