கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 4 July 2020 4:32 AM IST (Updated: 4 July 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளுக்கான செலவுக்காக ரூ.40 கோடி தொகையை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அறிவிக்கப்பட்டுள்ள நோயாகும். எனவே இதற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஜூன் 26-ந் தேதி அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு (1,070 படுக்கைகள்) உணவுக்கான செலவுத் தொகையாக ரூ.2 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்தை அளிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் கோரியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதுபோல கொரோனா நோயாளிகளுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளை செய்து தரும் செலவுக்காக ரூ.40 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் (ஜூன் 4 முதல் ஜூலை 4-ந் தேதிவரை) அனுமதிக்கும்படி கோரியுள்ளார்.

சென்னையில் உணவுச் செலவுக்காக ரூ.350 மட்டும் அனுமதிக்கலாம் என்று அதற்கான குழு நிர்ணயித்துள்ளது. அதன்படி ரூ.1 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரம் தொகை அனுமதிக்கப்படுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளுக்காக ஆகும் ரூ.40 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜூன் 1-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரையில் பணியாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்களுக்கான கேமரா உள்ளிட்ட செலவுத் தொகையாக ரூ.3.81 கோடி கோரப்பட்டுள்ளது. அரசிடம் வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் குறித்து கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது. அவை ஏற்கப்பட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.45.77 கோடி அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story