கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன? - முதல்-அமைச்சருடன்,மத்திய குழுவினர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
சென்னை,
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கடந்த 8-ந்தேதி சென்னை வந்தனர்.
மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவில் மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை இணைச் செயலாளர் ராஜேந்திர ரத்னூ, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுபோத் யாதவ், மின்னணு மருத்துவ ஆவணங்கள் இயக்குநர் ரவீந்திரன், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் சுகாஸ் எஸ்.தாண்டோர், தொற்றுவியல் நிபுணர் பிரவீன் ஆகியோர் இடம் பெற்றனர்.
மத்திய குழுவினர் சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா பிரத்யேக மருத்துமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், டி.எம்.எஸ் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆராய்ந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், கொரோனா தொற்று அதிகம் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய குழுவினர் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் 1 மணிநேரம் நடந்தது.
மத்திய குழுவினர் நேற்றுடன் தங்களுடைய 3 நாள் ஆய்வை நிறைவு செய்தனர். இதையடுத்து இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story