ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் உரிமைகளுக்காக தி.மு.க. இயங்கும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. மக்களின் உரிமைகளுக்காக இயங்கும் என்று கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமுர்த விஜயகுமார் உள்ளிட்ட 500 குடும்பத்தினரும், பா.ஜ.க.வில் இருந்தும், அ.தி.மு.க பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 50 குடும்பத்தினரும் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது, மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அவர் களை வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அது தெரிந்ததால்தான், மக்களை தி.மு.க.தான் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நீங்கள் அனைவரும் வந்து தி.மு.க.வில் இணைந்திருக்கிறீர்கள். மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவி வருகிறது. இது ஜூலை மாதம். இன்னும் சில நாட்களில் ஜூலை முடியப்போகிறது. ஆனால் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறதே தவிர குறையவில்லை; குறைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.
ஊடரங்கு போட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றார்கள். ஆனால் 130 நாட்களாக ஊடரங்கில் தான் இருக்கிறோம். ஆனால் கொரோனா குறையவில்லை என்றால் இந்த அரசாங்கத்துக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை
என்று தானே அர்த்தம்?. கொரோனா பரவலைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவிகள் செய்தார்களா? என்றால், மத்திய அரசும் செய்யவில்லை; மாநில அரசும் செய்யவில்லை.
கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையையே மறைத்துவிட்டார்கள் என்று. கொரோனாவில் மரணம் அடைந்தவர்கள் தமிழகத்தில் தான் குறைவு என்று காட்டுவதற்காக, இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைத்துவிட்டார்கள். ஒன்றிரண்டு எண்ணிக்கை குறைந்தால் அது கணக்கில் ஏதோ விடுபட்டுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் 444 பேர் உயிரிழந்த தகவலை மறைத்துவிட்டார்கள்.
இந்த மரண எண்ணிக்கை சென்னையில் மட்டும்தான். மற்ற மாவட்டங்களிலும் இதுபோல் மறைத்துள்ளார்களா? என்பதும் இன்னும் தெரியவில்லை.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் கை வைத்து விட்டார்கள். படிக்க முடியாது, வேலைக்குப் போக முடியாது என்ற நிலைமையை உருவாக்குகிறார்கள். இதற்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அதன் தீர்ப்பைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவோம். இப்படி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களது உரிமைகளுக்காக இயங்கும் தி.மு.க.வை நோக்கி வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story