அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்; கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு


அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்; கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 12:35 AM IST (Updated: 2 Aug 2020 12:35 AM IST)
t-max-icont-min-icon

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்துவிட்டன. இந்தநிலையில் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி, மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த கல்லூரிகளில் இளங்கலை 2 மற்றும் 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க இருப்பதாக அறிவித்தது.

அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நாளை முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்கள், செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் 3-ந்தேதி (நாளை) முதல் தொடங்கப்பட வேண்டும். இணையதள வசதி இல்லாத மாணவ-மாணவிகளுக்கு ‘வாட்ஸ்-அப்’ குழு அல்லது கல்லூரியின் இணையதளத்தில் பாடங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

துறைத்தலைவர்கள் வகுப்புகளின் காலஅட்டவணை, பாடம் தயாரித்தல், மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் பாடம் நடத்துதல் குறித்து மாணவர்களின் கருத்துகளை பெறுவதற்கு முறையான திட்டமிடுதலை முதல்வரின் ஆலோசனைபடி மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாணவ-மாணவிகளும் ஆன்லைன் வகுப்புகளில் பங்குகொள்வதை துறைத்தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விவரத்தை அறிக்கையாக இணை இயக்குனருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழி வகுப்பு நடைபெறுதலில் அனைத்து பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒவ்வொரு மண்டல இணை இயக்குனர்கள் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் குறித்து சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர்.
1 More update

Next Story