எளிதானது இ பாஸ் நடைமுறை : சென்னைக்கு மீண்டும் திரும்பும் வெளி மாவட்ட மக்கள்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 17 Aug 2020 2:28 AM GMT (Updated: 17 Aug 2020 2:58 AM GMT)

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

சென்னை,

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

 தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவம், திருமணம், இறப்பு போன்றவற்றுக்கு தவிர வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக இருந்தது. அதேவேளை பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் வழங்கும் வேலையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் இ-பாஸ் நடைமுறையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எப்படி விண்ணப்பித்தாலும் இ-பாஸ் கிடைக்காது என்பதே மக்களின் எண்ணமாக இருந்தது.

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தாலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடரும் என்றே அரசு அறிவித்தது. என்றாலும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே முக்கிய காரணங்களுக்காக மக்கள் தடையின்றி பயணிக்க 17-ந்தேதி (இன்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் கிடைக்கும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இ-பாஸ் தளர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பித்தால் உடனடியாக, இ-பாஸ் கிடைக்கிறது. அதேவேளை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது.

இபாஸ் நடைமுறை எளிதானதால்  சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.  சென்னையில் இருந்து ஏராளமனோர்  சொந்த ஊர் செல்வதையும், ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதையும் காண முடிகிறது.  பொதுப்போக்குவரத்து இல்லாததால் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பயணிப்பதை காண முடிகிறது.

Next Story