‘பி.எம்.கேர்ஸ்’ நிதி: சீன நிறுவனங்களை அதில் இணைத்துள்ளீர்களா? ப.சிதம்பரம் கேள்வி


‘பி.எம்.கேர்ஸ்’ நிதி: சீன நிறுவனங்களை அதில் இணைத்துள்ளீர்களா? ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 19 Aug 2020 7:57 AM GMT (Updated: 2020-08-19T13:27:44+05:30)

‘பி.எம்.கேர்ஸ்’ நிதி நன்கொடையில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா நிவாரணங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரதமர் பராமரிப்பு நிதியை (பி.எம்.கேர்ஸ்) தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரி தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதில் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மாற்றக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

இந்நிலையில் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதி நன்கொடையில் சீன நிறுவனங்களை இணைத்துள்ளீர்களா? என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்வி வட்டாரங்களில் பி..எம்.கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும்.

‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு யார் நன்கொடை அளித்துள்ளார்கள்? 2020,மார்ச் மாதத்துக்குள் ரூ.3,076 கோடி நிதி யார் கொடுத்தது?. சீன நிறுவனங்களை அதில் இணைத்துள்ளீர்களா? ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள்? யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளர்கள்?

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏனென்றால், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியின் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நிர்வாகச்செயல்பாடுகள் ஆகியவை குறித்து நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை.

‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை தொடக்கத்திலிருந்து யாரெல்லாம் பெற்றுள்ளார்கள்? பணம் பெற்றவர்களிடம் இருந்து அந்த பணம் முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பயன்பாட்டுச் சான்று பெறப்பட்டுள்ளதா? ஆர்.டி.ஐ விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இந்த நிதி இருந்தால், இந்த கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?” என்று பதிவிட்டுள்ளார். 
Next Story