விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாடுங்கள் - தமிழக அரசு வேண்டுகோள்


விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாடுங்கள் - தமிழக அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Aug 2020 11:30 PM GMT (Updated: 20 Aug 2020 10:31 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்றும், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்து, பின்னர் அதனை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, அவரவர் வீடுகளில் விழாவை கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தது.

ஆனால் வழக்கம் போல் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே தடையை மீறி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தடையை மீறி விநாயகர் சிலைகளை நிறுவி, ஊர்வலம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும் என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை (22-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 29-ந் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டும், அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story