போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி; என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை - சென்னையில் போலீசார் அதிரடி


போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி; என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை - சென்னையில் போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 21 Aug 2020 11:45 PM GMT (Updated: 2020-08-22T03:48:10+05:30)

சென்னை அயனாவரத்தில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி, என்கவுண்ட்டரில் துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை,

சென்னையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக இருந்த அமைந்தகரையை சேர்ந்த ரவுடி ராதா என்ற ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரின் தீவிர நடவடிக்கைக்கு பயந்து பிரபல ரவுடி டி.பி.சத்திரம் தட்சிணா என்கிற தட்சிணாமூர்த்தி அண்ணாநகர் போலீசில் சரணடைந்தார்.

இதேபோல் அயனாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடியும், கஞ்சா வியாபாரியான இளநீர் சங்கரை பிடிக்க இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சங்கரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ரவுடி சங்கர் சென்னை நீலாங்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையொட்டி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நீலாங்கரைக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ரவுடி சங்கரை துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வழக்கு செலவிற்கும் ஆடம்பர செலவிற்கும் தேவையான பணத்தை கஞ்சா விற்பதன் மூலமும், மாமூல் வசூலிப்பதிலும் சம்பாதிப்பதாக தெரியவந்தது.

கஞ்சா பொட்டலங்களும், அரிவாள்களும் அயனாவரம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனது காதலி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் சங்கர் தெரிவித்தார். அதனடிப்படையில் சங்கரை தனிப்படை போலீசார் அவர் குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது நேற்று அதிகாலை நேரம். அப்பகுதி மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சங்கரோடு, அவரது காதலி வீட்டுக்குள் தனிப்படை போலீசார் நுழைந்தனர். இந்தநிலையில் சங்கர் திடீரென்று வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து போலீஸ்காரர் முபராக்கை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.

போலீஸ்காரர் முபாரக்கின் தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே கையில் அரிவாளை சுழற்றியபடி சங்கர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை இன்ஸ்பெக்டர் நடராஜ் பிடிக்க முற்பட்டபோது அவரையும் ரவுடி சங்கர் அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் நடராஜ் தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் 3 ரவுண்டு சுட்டதாக தெரிகிறது.

சீறிப்பாய்ந்த 3 குண்டுகளும் ரவுடி சங்கரின் வயிற்று பகுதியை துளைத்தன. அரிவாளால் பாய்ந்த ரவுடி சங்கர் குண்டுகள் துளைத்ததும், ‘அய்யோ... அம்மா...’ என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

ரவுடி சங்கரையும், அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸ்காரர் முபாரக்கையும் காப்பாற்றுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் ரவுடி சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ்காரர் முபராக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதிகாலை வேளையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அயனாவரம் நியூ ஆவடி சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் விழித்தெழுந்து அங்கு திரண்டனர்.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குண்டு பாய்ந்து இறந்த ரவுடி சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சங்கர் பலியான இடத்தில் அவரது உறவினர்கள் திரண்டு, கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

Next Story