விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறையில் மாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பை பெறுவதற்கான நடைமுறையில் மாற்றங்களை செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருந்தன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் பல்வேறு ஆவணம், ஒப்புதல் என விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில் அவற்றையெல்லாம் சரி செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எம்.சந்திரசேகர், உறுப்பினர்களான டி.பிரபாகரராவ், ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன் விவரம் வருமாறு:-
மின் இணைப்பு கோரும் விவசாயியின் கிணற்றில் கூட்டு சொந்தக்காரர் இருப்பின் கூட்டு சொந்தக்காரர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் பல விவசாயிகள் விவசாயத்துக்கான மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் துயரப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நிலையில் இருக்கும் விண்ணப்பதாரர் உறுதிமொழி பத்திரம் இணைத்தால் விண்ணப்பம் பதிவு செய்ய ஏற்றுக் கொள்ளப்படும். ஒரே சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு சர்வே நம்பரில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும் பட்சத்தில் அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.
ஆனால், குறைந்தது ஒவ்வொரு கிணற்றுக்கும் ½ ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு இடமாற்றம் தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கும் அனுமதிக்கப்படும். மின் இணைப்பை இடமாற்றம் செய்ய ஆகும் செலவை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். இட மாற்றத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றில் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு இடத்தில் உள்ள அவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றுக்கு அல்லது கூட்டாக சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
கூட்டாக சொந்தமான கிணற்றில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு இடத்துக்கு அவருக்கு மட்டும் அல்லது கூட்டாக சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு உள்ள கிணற்றின் கூட்டாளிகள் பெயரில் மின் இணைப்புகள் இருக்க வேண்டும் அல்லது கூட்டாளிகள் ஒப்புதல் பெற வேண்டும். விவசாய மின் இணைப்பு பெற அவசியமற்ற பல சான்றுகள் கேட்கப்படுகின்றன. கிணறு மற்றும் நிலம் ஆகியவற்றின் உரிமை சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்தால் போதுமானதாகும்.
வேறு எந்தவிதமான உரிமை சான்றுகளும் அவசியம் இல்லை. குறைந்தது ½ ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். மின் இணைப்புக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து மின் இணைப்பு பெற தயாராக இருப்பதாக விவசாயி தெரியப்படுத்திய நாளில் இருந்து 3 நாட்களுக்குள் மின் இணைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தும் வகையில் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story