சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும்: பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
‘சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என்றும், ‘தேர்தலுக்கான கள பணிகளை உடனடியாக ஆரம்பியுங்கள்’ என்றும் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று 5 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க.வுக்கு புதிய பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் தேர்ந்தெடுக்கக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பொதுக்குழுவை பிரமாண்டமாக ஒரு மாநாடு போல் இந்த அரங்கில் நடத்துவதற்கு பதிலாக, நாம் அனைவரும் ஒரே இடத்தில் கூட இயலாத சூழ்நிலையை கொரோனா ஏற்படுத்திவிட்டது.
நான் தலைவராக இருக்கும்போது, துரைமுருகன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டு இருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்த பெருமை. ஒரு முறையல்ல, 7 முறை காட்பாடி தொகுதியிலும், ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறையும் வென்றார். 9 முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் ‘சட்டமன்ற ஸ்டாராக’, ‘சூப்பர் ஸ்டாராக’ செயல்படும் துரைமுருகனை போன்ற மற்றுமொரு சீனியர் நம் கட்சியிலும் இல்லை, வேறு கட்சிகளிலும் இல்லை. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இல்லை.
துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். தானும் மகிழ்ச்சி அடைந்து, மற்றவர்களையும் மகிழ்விப்பவரே அனைவராலும் மதிக்கப்படுவார். அந்த வகையில் அனைவரது விருப்பத்துக்கும் உரியவராக இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியாக இருக்கிறார்.
டி.ஆர்.பாலுவும் தி.மு.க.வுக்கு கிடைத்த ஆற்றல் மிக்க போர் வீரர். ‘வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் பாலுவும் ஒருவர்’ என்று கருணாநிதியால் பாராட்டப்பட்டவர். கருணாநிதிக்கு ஒன்று என்றால், உயிரையும் கொடுக்கக்கூடியவராக இருக்கக்கூடியவர் பாலு. துரைமுருகன் என்றால் கனிவு. டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு. இந்த கனிவும், கண்டிப்பும் கட்சி வளர்ச்சிக்கு பயன்படட்டும்.
கிளைக்கழக பொறுப்பாளர்களின் தேர்தல், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியல் ஆகிய 2 பணிகளையும் உடனடியாக முடித்துவிட வேண்டும் என்று நிர்வாகிகளை, குறிப்பாக மாவட்ட செயலாளர்களை கேட்டுக்கொள்கிறேன். இப்பணிகளை முடித்ததும் நாம் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கியாக வேண்டும். கொரோனா... கொரோனா... என்று மார்ச் மாதம் முதல் ஐந்து மாதம் ஓடிவிட்டது. இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. இந்த ஐந்து மாதத்துக்கும் சேர்த்து நாம் தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும். தேர்தல் எப்போது நடந்தாலும், நாம்தான் வெற்றி பெற போகிறோம். ஆனால் நாம் அந்த வெற்றியை எளிதில் பெற்றிட விட மாட்டார்கள். போராடித்தான் வெற்றியை பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு இலக்குதான் இருக்க வேண்டும். அதுதான் மீண்டும் தி.மு.க. ஆட்சி, மீண்டும் கருணாநிதி ஆட்சி, மீண்டும் நம்முடைய ஆட்சி. நாம் முழுமையாக உழைக்க வேண்டிய காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது. அதுதான் சட்டமன்ற தேர்தல். கொடிய கொரோனா காலத்திலும், மக்களுக்கு துணை நிற்க வேண்டும், நாமும் பக்க பலமாய் இருந்திட வேண்டும் என ஒன்றிணைவோம் வா திட்டத்தை தொடங்கினோம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே எந்தவொரு கட்சியாலும் இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றிட முடியாது. அதை செய்தோம்.
கருணாநிதி மட்டும் இன்று இருந்திருந்தால் உங்கள் கைகளையெல்லாம் பிடித்து முத்தம் கொடுத்து, கவிதை நடையிலே கடிதத்திலே கட்டுரையிலே எழுதி பாராட்டியிருப்பார். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒன்றிணைவோம் வா. இணைந்தோம், பணியாற்றினோம் வெற்றி பெற்றோம். அப்படி ஒன்றிணைந்து கட்சிப்பணி ஆற்றுவோம். வெற்றி பெறுவோம். வெற்றி நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசுகையில், “என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை பொதுச்செயலாளராக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எங்கோ இருந்து வந்த என்னை எதையும் கேட்காமல் அரசியலில் ஆளாக்கி அமைச்சராக்கி, எல்லா பதவியையும் பார்க்க வைத்து என்னை வளர்த்த தலைவர் கருணாநிதி. என் வாழ்நாளில் அவருக்கு நான் இறுதி வரை நன்றியோடு இருந்தேன். அவர் மறைந்துவிட்ட பிறகு, இன்று அவருடைய மகன் தலைவராக வந்துள்ளார். நான் மறைந்து போனாலும் நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கும், எங்கள் குடும்பம் தாசாதி தாசனாக இருக்கும் என்று சத்தியம் செய்கிறேன்” என்றார்.
கனிமொழி எம்.பி. பேசுகையில், “கொரோனா காலத்தில் இந்த பொதுக்குழுவை நடத்த முடியாது என்ற சூழல் இருந்தபோது என்னால் நடத்த முடியும் என்று இந்த நாட்டில், ஒரு கட்சிக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எல்லா மக்களிடமும் சென்று சேரக்கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்களாக பதவியேற்றுள்ள பொன்முடி, ஆ.ராசா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கருத்தியல் ரீதியாக மத்திய அரசாங் கத்தை நாம் எதிர்ப்பதற்கு இவர்களின் குரல் மிக முக்கியமானதாக ஒலிக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story