நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களிலும் கூட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ., பந்தலூரில் 14 செ.மீ., பவானியில் 13 செ.மீ., வால்பாறையில் 12 செ.மீ. என மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story