பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு: தமிழக அரசு உத்தரவு


பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு: தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 14 Oct 2020 4:45 AM IST (Updated: 14 Oct 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட செயலாளர் எஸ்.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரியில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த தொகைக்கு முதல் கட்டமாக ரூ.14.96 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அந்த தொகையை கையாள்வதற்கான விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து, குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் அதிகபட்ச இழப்பீடாக ரூ.10 லட்சம் தொகையை நிர்ணயித்து அரசு உத்தரவிடுகிறது. மேலும் ஆரம்ப கட்டமாக ரூ.2 கோடியை, தற்போது உருவாக்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகைக்கு அரசு வழங்குகிறது.

பாலியல் குற்றங்களால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்ச இழப்பீடாக ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும்.

மிக கடுமையான பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை;

மறுவாழ்வு தேவைப்படும் அளவுக்கு மன ரீதியான அல்லது உடல் ரீதியாக கொடுங்காயம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; ஆபாசப் படம் எடுக்கப்பட்டிருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை;

பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துவிட்டால் குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை;

உடல் உறுப்புகளை இழந்து 80 சதவீத நிரந்த ஊனம் ஆக்கப்பட்டால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை; 40 சதவீதம் முதல் 80 சதவீதத்துக்கும் குறைவான அளவில் ஊனம் ஆக்கப்பட்டால் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை; 20 சதவீதம் முதல் 40 சதவீதத்துக்கு குறைவாக ஊனம் ஆக்கப்பட்டால் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை; 20 சதவீதத்துக்கும் குறைவாக ஊனம் ஆக்கப்பட்டால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை;

பாலியல் குற்றத்தினால் கர்ப்பிணியாக்கப்பட்டால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை; கர்ப்பிணியாக்கப்பட்டு, கரு கலைக்கப்பட்டு, கர்ப்பமாகும் தகுதியை இழந்துவிட்டால் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story