வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:33 PM IST (Updated: 21 Oct 2020 3:33 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகளை போல் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசு அறிவித்த வேளான் சட்ட மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளில் விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளை பாதுகாக்கவும், விவசாயிகள் பெற்றுவந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசும் இதுபோல் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பஞ்சாப் சட்டப்பேரவையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கிற வகையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மசோதாக்களை தாக்கல் செய்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசும்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக மசோதாக்கள் நிறைவேற்றியதால் ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை என்றும் விவசாய விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை பறிக்கிற வகையிலும் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசும் விவசாயிகள் நலனை பாதுகாக்க தனி சட்டம் இயற்றியுள்ளது. இதன்மூலம் வேளாண் சட்டங்களில் இருந்து விவசாயிகளின் நலனை பாதுகாக்கிற வகையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டிருக்கிறது. எனவே, மத்திய வேளாண் சட்டங்களில் இருந்து விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளையும், விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் கொண்டுவந்துள்ள மசோதாக்களை போல தமிழக அரசும் உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story