வியாபாரி செல்வமுருகன் மரணம்: "காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்" - மு.க.ஸ்டாலின்
வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக, தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் பண்ருட்டியில் செல்வ முருகன் என்பவர் நெய்வேலி நகர காவல்நிலைய போலீசாரின் சித்திரவதைக்கு பலியாகி இருக்கிறார். சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு பிறகு உயர்நீதிமன்றம் எச்சரித்தும் போலீஸ் கஸ்டடி மரணங்கள் தொடர்கிறது.
‘உன் கணவர் மீது ஸ்டேஷனில் உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்’ என்று எச்சரிக்கப்பட்டதால் தன் கணவனைக் காணவில்லை என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை வாங்காமல் கடலூர், நெய்வேலி நகர காவல் நிலையங்களில் அலைக்கழித்தது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறுகிறது. செல்வமுருகன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து உண்மையான வழக்கிற்காகவா? பொய் புகாரிலா? மிருகத்தனமாக தாக்கிய போலீசார், காயங்களுடன் சிறைச் சாலையில் செல்லும் முருகன் அடைக்கப்பட்டது எப்படி? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் மறைத்து தமிழக காவல்துறையின் எஞ்சி இருக்கின்ற பெருமையையும் முதலமைச்சர் சீர்குலைத்து விடவேண்டாம்” என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை - செல்வமுருகன் என்பவர் பலி!@CMOTamilNadu-ன் பொறுப்பில் இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல் இன்றி தடுமாறுகிறது.
— M.K.Stalin (@mkstalin) November 7, 2020
இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். pic.twitter.com/2Y0OvDf3Fh
Related Tags :
Next Story