பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி


பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 10 Dec 2020 5:39 AM IST (Updated: 10 Dec 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

தைப்பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருவாரூர், 

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- விவசாயிகளை நீங்கள் சந்தித்து கொண்டிருக்கிறீர்கள், விவசாயிகள் உங்களிடம் வைக்கக்கூடிய பிரதானமான கோரிக்கை என்ன?

பதில்:- நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

கேள்வி:- செங்கரும்பு அதிகமாக பாதித்திருக்கிறது?. பயிர் காப்பீடு இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கப்படுமா?.

பதில்:- ஒவ்வொரு தைப்பொங்கல் வருகின்றபோது, கரும்பு வாங்குகிறோம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. தைப்பொங்கல் பண்டிகையின்போது அந்த கரும்புகளை எல்லாம் மக்களுக்கு வழங்க அரசு பரிசீலிக்கும், நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, 2ஜி விவகாரத்தில் ஒரு பொய்யை மறைக்காதீர்கள், தேவையில்லாமல் மற்றவர்களை தூண்டிவிட்டு பேட்டி கொடுக்க வைக்காதீர்கள் என்று கூறியிருக்கிறாரே?.

பதில்:- அவர் பெரிய தலைவரா?. எந்த கட்சிக்கு தலைவர்?. தி.மு.க.வில் தலைவராக இருக்கலாம், எங்கள் கிளை செயலாளர் அந்தஸ்துகூட அவருக்கு கிடையாது. ஏனென்றால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகளவிலே தலைகுனிய வைத்தவர் அவர். எவ்வளவு பெரிய ஊழல். அவர் கூப்பிட்டால் நாங்கள் வரணுமா?. சாதாரண ஆள், தி.மு.க.விற்கு வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம்?. ஏனென்றால், வைட்டமின் நிறைய இருக்கிறது. அதனால் அவரை வைத்து கொண்டிருக்கிறார்கள். செலவுக்கு அவ்வப்போது வேண்டுமல்லவா?. அதற்காக வைத்து கொண்டிருக்கிறார்களே ஒழிய எங்களுக்கு அவர் பெரிய ஆள் கிடையாது.

சரியான ஆதாரம் கொடுக்காத காரணத்தால்தான் அவர் விடுவிக்கப்படுகிறார் என்று சொன்னார்களேயொழிய விசாரித்து, விசாரணையில் இவர் நிரபராதி என்று சொல்லவில்லை. இப்போது மேல்முறையீடு தொடர்ந்ததை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், வழக்கு வரும், அப்போது அவர் எங்கிருப்பார் என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

கேள்வி:- சாதிவாரி கணக்கெடுப்பு தேர்தல் யுக்தியாகத்தான் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவிக்கின்றாரே?

பதில்:- அவர் எப்போதும் அப்படித்தான் சொல்லி கொண்டிருக்கிறார். சாதி வாரியாக கணக்கெடுப்போம் என்று சொல்லியிருக்கிறோம், அது நிச்சயமாக முடிவு பெறும். அனைத்து சாதி பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு கிடைக்க எங்கள் அரசு துணை நிற்கும்.

கேள்வி:- பேரிடர் காலங்களில் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்களே?

பதில்:- தூர்வாருவது என்பது ஆழப்படுத்துவதற்குத்தான். ஏரிகள், அணைகளில் குறிப்பிட்ட அளவு தான் நீரை தேக்க முடியும். உபரியாக வரும் நீரை வெளியேற்றத்தான் வேண்டும். அதிகமான நீர் வரும்போது இவ்வாறு ஏற்படும். இங்கு மட்டுமல்ல, உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் இப்படித்தான். இயற்கையை எதிர்த்து யாரும் போராட முடியாது.

ஆண்டவன் தான் நமக்கு துணை நிற்க வேண்டும். மத்திய அரசு புரெவி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக வந்து பார்வையிட்டு, சேதாரங்களை கணக்கிட்டு தேவையான நிதியுதவி செய்ய வேண்டுமென்று மத்திய அரசிற்கு கடிதம் கொடுத்துள்ளோம், அவர்கள் நிச்சயமாக வருவார்கள்.

கேள்வி:- வேளாண்மை புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்று கூறப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகிறதே?

பதில்:- குறைந்தபட்ச ஆதார விலையில்தான் நாங்கள் கொடுத்து கொண்டிருக்கிறோம். டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதலுக்கு இப்போது ஆதார விலை கொடுத்து கொண்டிருக்கிறோம். வேண்டும் என்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சில அரசியல் கட்சி தலைவர்கள் இதை எதிர்த்து போராட்டம் செய்கிறார்கள். இந்த வருடம் 32 லட்சம் டன் அரிசி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்துள்ளோம்.

விவசாயியாக இருப்பதால் தான் இந்த சட்டங்களை ஆதரிக்கிறேன். முதல்-அமைச்சர் என்பது அடுத்த கட்டம்தான். நான் விவசாயி என்கிற காரணத்தால்தான் அதில் என்னென்ன பிரச்சினை இருக்கிறதென்று உணர்ந்த காரணத்தால் தான் இன்றைக்கு வரைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்து கொண்டிருக்கிறேன். நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கு என்னென்ன நன்மை கிடைக்குமோ? அந்த நன்மைகளை பெற்று தர பாடுபடுவோம் என்று அவர் பதில் அளித்தார்.


Next Story