சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாரா? - முத்தரசன் பேட்டி
90 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாரா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 30 விவசாயிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். விவசாயிகள் படும் கஷ்டத்தை மத்திய அரசு அறிந்து கொண்டு தீர்வு காணாமல் இருக்கிறது. இந்த சட்டங்களை திரும்ப பெறும் வரை டெல்லியிலும், தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
தன்னை விவசாயி என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் அவர்கள் கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும் ஆதரித்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.
நீட் தேர்வு, வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த சட்டங்களை ஆதரித்ததால் வரும் தேர்தலில் முதல்-அமைச்சருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அரசு விழாக்களை எல்லாம் அரசியல் விழாவாக பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகள் மாற்றி வருகிறது.
சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற விழாவிலேயே அது வெட்ட வெளிச்சமானது. தற்போது எடப்பாடியில் நடந்த அரசு விழாக்களோடு தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் நடத்தி இருக்கிறார். கொரோனாவால் மக்கள் பாதித்தபோதும், புயல், வெள்ளத்தால் டெல்டா மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட போதும் நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினோம்.
ஆனால் புயல் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு நிவாரணம் வழங்குவதாக கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போல் பொங்கல் பரிசாக ரூ.2,500-ஐ எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பா.ஜ.க. உள்ளது என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறார். அப்படி என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வேண்டியது தானே. தனித்து போட்டியிட தயாரா? நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரட்டும். அவரது கட்சி கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கட்டும். அதன்பிறகு எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
Related Tags :
Next Story