மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், அரசியலில் நுழைந்தார்; ‘காமராஜர், கக்கன், அண்ணா போன்று எளிமையாக இருக்க வேண்டும்’ என்று பேச்சு + "||" + Retired IAS Officer Sakayam, entered politics; Talk about simple as Kamaraj, Kakkan, Anna

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், அரசியலில் நுழைந்தார்; ‘காமராஜர், கக்கன், அண்ணா போன்று எளிமையாக இருக்க வேண்டும்’ என்று பேச்சு

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், அரசியலில் நுழைந்தார்; ‘காமராஜர், கக்கன், அண்ணா போன்று எளிமையாக இருக்க வேண்டும்’ என்று பேச்சு
அரசியலுக்கு வருவதாக ஆதரவாளர்கள் மத்தியில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் அறிவித்தார்.
அரசியல் களம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம், கடந்த ஆண்டு அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் அரசியலில் காலடி எடுத்து வைக்க இருப்பதாகவும், அதுகுறித்த முடிவை 21-ந் தேதி (நேற்று) சகாயம் அறிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி, சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்' எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன் கலந்து கொண்டார்.

கிரானைட் முறைகேடு

இந்த கூட்டத்தில் சகாயம் பேசியதாவது:-

தற்போது தமிழகம் ஊழலால் மாட்டிக்கொண்டிருக்கிறது. எனவே அதை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். எனது 29 ஆண்டு அரசு பணி காலத்தில் நான் மிகுந்த நேர்மையாக பணியாற்றி உள்ளேன். ஆனால் எனது நேர்மையான பணிக்கு கிடைத்த பரிசுகள் அவமானங்களும், பணிமாறுதல்களும் தான்.மதுரை கலெக்டராக பணியாற்றியபோது கிரானைட் முறைகேட்டை வெளிகொண்டு வந்ததால், பணிமாறுதல் செய்யப்பட்டு அதிகாரமற்ற பணிக்கு மாற்றப்பட்டேன். அங்கு 7 ஆண்டுகள் செயலற்று 
இருந்தேன். இதை எல்லாம் இதற்கு மேல் தாங்க முடியாது என்று எண்ணி, விருப்ப ஓய்வு பெற்றேன்.

நடிகர்களுடன் இணைந்து அவதூறு
நான் பதவிக்கு ஆசைப்பட்டு இருந்தால் உயர் பதவிகளில் இருந்திருக்கலாம். அரசியல் தாகத்தோடு நான் பயணிக்கவில்லை. அந்த எண்ணத்தோடு நான் பணி ஓய்வு பெறவில்லை. ஆனால் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வதாக அவதூறுகள் பரப்பப்பட்டன. உண்மையில் நான் அவர்களுடன் போனில் கூட பேசியது இல்லை.
அரசியலில் ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவது மிக கடினம். அரசியலில் ஈடுபட்டால் எனது நேர்மைக்கு பங்கம் வந்துவிடுமோ? என்று பயந்திருந்தேன். ஆனால் இளைஞர்களும், பொதுமக்களும் எங்கு சென்றாலும், என்னை சந்தித்து அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். எனவே அதனை ஆழமாக பரிசீலித்து வந்தேன். இளைஞர்கள் வரும்காலம் வெறும்காலம் ஆகிவிட கூடாது. 

மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதிகாரம் இருந்தால்தான் அதை செய்ய முடியும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். அரசியல் களம் காண்போம் என்பதை ஆமோதிக்கிறேன்.

அடுத்தகட்ட நகர்வுகளை...
ஆனால் அதேவேளை எனக்கு ஒரு கோரிக்கை உண்டு. காமராஜர், கக்கன், அண்ணா ஆகிய தலைவர்கள் போல நேர்மையாகவும், எளிமையாகவும் இருந்தால் சாதி, மத வேறுபாடுகளை உடைத்தெறிக்கும் லட்சியவாதியாக இருந்தால், வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருந்தால், நாம் அரசியல் களம் காண்போம். சுயநலத்துடன் பணியாற்றக்கூடாது. மற்ற கட்சிகள் போல வெடி கலாசாரம், தூதிப்பாடல் கூடாது. லட்சியமே முக்கியமாக, கொள்கை உணர்வோடு புதிய சமுதாயம் அமைத்திட நீங்கள் புறப்பட்டால், அதற்கு நான் வலதுகரமாக இருந்து துணை நிற்பேன்.

இப்போதுள்ள அரசியல் களம் நயவஞ்சகம், நரித்தனம் உள்ளது. எனவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்போது அரசியலில் முதல்கட்டமாக காலடி எடுத்து வைத்துள்ளோம். அடுத்தகட்ட நகர்வுகளை கவனமாக எடுத்து வைப்போம்.

இவ்வாறு அவர் பேசினர்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
கூட்டத்தில் வருமான வரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அதுபோல ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு விளம்பரம் தேவையில்லை. ஒரு நல்ல நேர்மையான அரசியல் தலைவர் நமக்கு கிடைக்கமாட்டாரா? என மக்கள் ஏங்கிக் காத்திருக்கிறார்கள். நேர்மை என்றாலே நினைவுக்கு வருவது காமராஜர். அவரை போல நேர்மையான தலைவராக சகாயம் விளங்குகிறார். எளிமையான நேர்மையான நிர்வாகம் தேவை என மக்கள் விருப்பப்படுகிறார்கள். எனவே தயவு செய்து சகாயம் அரசியலுக்கு வரவேண்டும். இதற்காக தமிழகமே காத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.