பால் விலை ரூ.3 குறைப்பு கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 உத்தரவுகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்து


பால் விலை ரூ.3 குறைப்பு கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 உத்தரவுகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்து
x
தினத்தந்தி 8 May 2021 12:30 AM GMT (Updated: 7 May 2021 11:15 PM GMT)

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கோப்புகளில் முதலாவதாக கைெயழுத்திட்டார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு

அதைத் தொடர்ந்து அந்தக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்-அமைச்சராக) தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடித் தேர்ந்தெடுத்தனர். அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மு.க. ஸ்டாலின் சந்தித்து, ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். அதன்படி மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக நியமித்து, அரசை அமைக்கும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

தனது தலைமையில் 33 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்து, மந்திரிகள் பட்டியலை வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், 7-ந் தேதி (நேற்று) காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து பதவி ஏற்கும்படி, மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

பதவி ஏற்பு விழா

அதன்படி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், 8 மணியில் இருந்தே அழைப்பாளர்கள் வரத் தொடங்கினர்.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய விருந்தினர்கள் அங்கு வந்து அமர்ந்தனர்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா, மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் காலை 8.30 மணியளவில் வந்தனர். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன்எம்.பி., மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, மகன் தயாநிதி அழகிரி உள்பட மு.க.ஸ்டாலினின் உறவினர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர்.

கவர்னருக்கு அமைச்சர்கள் அறிமுகம்

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் வருகை தந்தனர். அமைச்சர்கள் அமரும் வரிசை அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை அளிக்கப்பட்டது.

காலை 8.57 மணியளவில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்காவுடன் வருகை தந்தார். 9.02 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் ஆகியோர் வந்தனர். கவர்னரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கவர்னருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

கவர்னரை மு.க.ஸ்டாலின் அழைத்து வந்து, தன்னுடன் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிற ஒவ்வொருவரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தனது மனைவி துர்க்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரக் குழந்தைகள் என குடும்பத்தினரை கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்

அதைத் தொடர்ந்து 9.06 மணிக்கு கவர்னர், மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் விழா மேடை ஏறினர். தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்களுடன் விழா தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்குமாறு கவர்னரை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கேட்டுக் கொண்டார். அதுபோன்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து காலை 9.11 மணிக்கு முதல்-அமைச்சராக பதவி ஏற்க மு.க.ஸ்டாலினை கவர்னர் அழைத்தார். மு.க. ஸ்டாலின் வந்து, முக கவசத்தை கழற்றிவிட்டு நின்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...”

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...” என ஆரம்பித்து, மு.க.ஸ்டாலின் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணத்தையும் எடுத்துக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் தனது பெயரை தனது தாத்தா,தந்தையின் பெயர்களையும் சேர்த்து முழுமையாக கூறியபோது, அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தார். கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து அளித்தார்.

அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து துரைமுருகன் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தார். கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி என்ற வரிசையில் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நெகிழ்ச்சியுடன் உரையாடினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை கண்டு மகிழ்ந்து, ஆசி வழங்க தந்தை கலைஞர் இல்லையே என்று எண்ணி அவர் மனம் கலங்கியபோது, கண்கள் குளமாகியது. அவரை அவரது சகோதரி செல்வி தேற்றினார்.

அதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம், அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம், பேராசிரியர் க.அன்பழகன் இல்லம் சென்று அந்த தலைவர்களின் நினைவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போற்றினார்.

கோட்டையில் முதல்-அமைச்சர்

அதையடுத்து தமிழக அரசின் தலைமைச்செயலகமான கோட்டைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பகல் 12.20 மணிக்கு வந்தார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக முதல் மாடியில் அமைந்துள்ள தனது அறைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

5 அரசாணைகளில் கையெழுத்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், 5 அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

அவை, அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லாத பயணம், கொரோனா நிவாரண உதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் அடையாளமாக முதல் கட்டமாக இந்த மாதம் (மே) ரூ.2 ஆயிரம் வழங்குதல், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், மனுக்கள் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்க அரசாணை, கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை என 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

மக்கள் வரவேற்பு, மகிழ்ச்சி

* கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். முதல் தவணை ரூ.2 ஆயிரம் இந்த மாதமே வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 16-ந் தேதி முதல் குறைத்து விற்பனை செய்யப்படும்.

தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் இன்று முதல் பயணம் செய்ய முடியும். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும்.

பதவி ஏற்ற அன்றே மக்கள் நலத்திட்டங்கள் ஐந்தினை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அரசாணைகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story