தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அவசர செய்தி


தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அவசர செய்தி
x
தினத்தந்தி 9 Jun 2021 10:45 PM GMT (Updated: 9 Jun 2021 10:45 PM GMT)

தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவசர செய்தி அனுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நேற்று பெரும்பான்மையான இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 தடுப்பூசிகள்தான் வந்துள்ளன. நேற்று காலை நிலவரப்படி, 12 ஆயிரத்து 520 மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் நேற்று போடப்பட்டுவிட்டன. இதனால் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு தமிழக அரசிடம் சுத்தமாக தடுப்பூசி கையிருப்பு இல்லை.

கையிருப்பில் இல்லை

ஏற்கனவே மத்திய அரசு நேற்று 63 ஆயிரத்து 370 ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், இன்று 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த தடுப்பூசி மருந்துகள் வந்து சேரவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்புவதாக தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தமிழக அரசால் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் சூழ்நிலையிலும் தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

அவசர செய்தி

எனவே உடனடியாக இன்று (வியாழக்கிழமை) தேவையான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு அவசர செய்தி அனுப்பி உள்ளார்.

Next Story