கொரோனா தொற்று பரவலை குறைக்க தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழு பரிந்துரை


கொரோனா தொற்று பரவலை குறைக்க தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழு பரிந்துரை
x
தினத்தந்தி 10 Jun 2021 11:08 PM GMT (Updated: 2021-06-11T04:38:30+05:30)

கொரோனா தொற்று பரவலை குறைப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 2 வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு கடந்த 24-ந்தேதியில் இருந்து வருகிற 7-ந்தேதி வரை அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்தது. தினமும் 30 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத்தொடங்கியது.

தற்போது, தமிழகத்தில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 16 ஆயிரமாக குறைந்துள்ளது. குறிப்பாக கொரோனா உச்சத்தில் இருந்த சென்னை, கோவையிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, காய்கறி, மளிகை, மீன், இறைச்சி, ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள், வெளியே செல்பவர்கள் கட்டாயமாக இ-பதிவு செய்து, அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அரசு உத்தரவை மீறி செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வருகிற 14-ந்தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை தற்போது உள்ளது போன்று தளர்வுகளுடன் நீட்டிக்கலாமா? அல்லது புதிய தளர்வுகளை வழங்கலாமா? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது. கூட்டத்தில், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வருவாய்த்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூடுதல் தளர்வுகள்

கூட்டத்தில், கொரோனா தொற்றை மேலும் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்துவது, தினசரி கொரோனா பரிசோதனையை 2 லட்சமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஒரு சில அத்தியாவசிய தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு இருந்தது.

தற்போது, தொற்று கணிசமாக குறைந்து வருவதால் அந்த மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகளை அளிப்பது குறித்தும், பொதுமக்களின் வாழ்வாதாரம் கருதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தளர்வுகளை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் தொற்று பரவலை 5 ஆயிரத்துக்கும் கீழ் கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனால், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க (21-ந்தேதி வரை) அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதேநேரம் தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இறுதி முடிவை தமிழக அரசுதான் எடுக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுமா? அல்லது சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு நாளை (இன்று) அதிகாரபூர்வமாக வெளியாகும்’’ என்றனர்.

மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு?

அதிகாரிகள் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் அதாவது 21-ந்தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை (சனிக்கிழமை) வெளியாக உள்ளது.

அதில் இ-பதிவில் மாற்றம், தொற்று குறைந்த மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட சில தளர்வுகள் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

Next Story