கொரோனா பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Jun 2021 7:49 AM GMT (Updated: 14 Jun 2021 7:49 AM GMT)

கொரோனா தொற்று பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்தால் மக்கள் நலன் கருதி படிப்படியாக தளர்வுகள் அற்விக்கப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், இ-சேவை மையம், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனிடையே கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

கொரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிதாக விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக சீனா மற்றும் இங்கிலாந்து மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இதுதொடர்பாக பதிலளித்த நீதிபதிகள், ஏற்கனவே விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று பரவல் தணியும் வரை, பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story