அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்
x
தினத்தந்தி 14 Jun 2021 4:43 PM GMT (Updated: 14 Jun 2021 4:43 PM GMT)

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு திரும்ப பெற்றார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு திரும்ப பெற்றார்.

அ.தி.மு.க.அமைச்சர்கள் மீது புகார்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க.வை சேர்ந்த அப்பாவு புகார் அளித்திருந்தார்.

அதேபோல, கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கி விட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்ததாக, அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் புகார் அளித்திருந்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த இரு புகார்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், புகார்களை பொதுத்துறை செயலரின் ஒப்புதலுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அனுப்பி உள்ளதாக குற்றம்சாட்டி, கவர்னரின் ஒப்புதலை பெற்று வழக்கு பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் இரு வழக்குகளை தொடர்ந்திருந்தார். அதேபோல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் தனியாக வழக்கு தொடர்ந்த்திருந்தார்

இந்த வழக்குகள் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமை செயலாளர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாபஸ்

இந்த 3 வழக்குகளும் நீதிபதி தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகராக தேர்வாகியுள்ள அப்பாவு தரப்பில் ஆஜரான வக்கீல், 3 வழக்குகளையும் திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story