கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப்பெறப்படும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப்பெறப்படும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2021 5:07 PM GMT (Updated: 2021-06-14T22:37:48+05:30)

கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்தநேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப்பெறப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்தநேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்பப்பெறப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் காணொலி பதிவு வாயிலாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

கட்டுக்குள் வந்திருக்கிறது

தமிழக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று தமிழகத்தில் ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமை இப்போது இல்லை.

ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிற சங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.

எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைப்பிடித்ததால்தான், இந்த அளவிற்குக் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால் முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசும், மக்களுடைய நெருக்கடியை உணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான் கொரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளர்வுகளைக் கொடுத்திருக்கிறோம். சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.

இந்தத் தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து, மக்கள் செயல்பட வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடக் கூடாது. தங்களுக்குத் தாங்களே ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு நாமேதான் முதன்மையான பாதுகாப்பு. வர்த்தகர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி தங்களது வணிகத்தைச் செய்ய வேண்டும்.

கட்டுப்பாடுகள் மீறப்பட்டால்...

தளர்வுகள் தருவது முக்கியமானது அல்ல. அந்தத் தளர்வுகளுக்கான விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றியாக வேண்டும்.

பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. மதுக்கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

கொரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.

போலீசார் கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்துகொள்கிற மக்களாக நம் தமிழக மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

மக்கள் துணை அவசியம்

அந்த விருப்பத்தை நம் மக்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு நிரம்ப இருக்கிறது.

பொதுப் போக்குவரத்து சேவை விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு மக்கள் துணை அவசியம். தொற்றுப் பரவலைத் தகர்க்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பேசியுள்ளார்.


Next Story