தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 79 ஆயிரம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 79 ஆயிரம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 19 Jun 2021 11:32 PM GMT (Updated: 2021-06-20T05:02:16+05:30)

கொரோனா 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ளலாம். தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 79 ஆயிரம் படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம்
சென்னை சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தையும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி என்பது மிகப்பெரிய தேவையாக இருந்தது. அதனை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

சென்னையில் அதிக தடுப்பூசி
இதேபோல், விழுப்புரம், நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வேகமாக தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது.பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வத்துடன் முன்வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போடப்பட்ட மாநகரமாய் சென்னை திகழ்கிறது. தமிழகத்துக்கு இதுவரை 1.22 கோடி அளவில் தடுப்பூசி வந்துள்ளது. 1.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5.56 லட்சம் கையிருப்பில் உள்ளது. மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் இன்று (நேற்று) வர இருக்கிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்னால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

3-வது அலை வந்தாலும்...
கொரோனா 3-வது அலை வரக்கூடாது. அவ்வாறு வந்தாலும், அதை சமாளிப்பதற்கு 79 ஆயிரம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியைப் போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையங்கள் திறந்துவைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

2,382 பேருக்கு கருப்பு பூஞ்சை
மினி கிளினிக்குகளின் டாக்டர்கள் கொரோனா பணிக்காக ஆஸ்பத்திரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் வரும்போது, அவர்கள் மீண்டும் மினி கிளிக்குகளில் பணிக்கு அனுப்பப்படுவார்கள்.நாளை (இன்று) முதல் தமிழகத்தில் 3 ஆயிரம் தொழுநோயாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்கெ சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தமிழகத்தில் இதுவரை 2 ஆயிரத்து 382 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 111 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதற்கான சிகிச்சை மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டதின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான கோரிக்கை முதல்-அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story