வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி


வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி
x
தினத்தந்தி 20 Jun 2021 2:07 AM GMT (Updated: 2021-06-20T07:37:47+05:30)

‘‘வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்’’ என்று நெல்லையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.

கலந்துரையாடல் கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசினார்.கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வணிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் மூர்த்தி, வரி விதிப்புகள் தொடர்பாக கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

சரக்கு-சேவை வரி
கூட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் பேசுகையில், சரக்கு-சேவை வரி விதிப்பில் உள்ள பாதிப்புகள், பத்திர பதிவுத்துறையில் உள்ள சிரமங்கள் குறித்து கூறினர்.அதற்கு பதில் அளித்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் சிறப்பாக அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்’ என்று கூறினார்.கூட்டத்தில் வணிக வரித்துறை ஆணையர் சித்திக், பத்திர பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், மார்க்கண்டேயன், ராஜா, வெங்கடேஷ், டாக்டர் சதன் திருமலைக்குமார், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.15 ஆயிரம் கோடி பாக்கி
வணிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து சரக்கு-சேவை வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூற முடியாத நிலை இருந்தது. தற்போது அரசு அதிகாரிகளே ஒவ்வொரு மண்டலங்களாக சென்று, வணிகர்களிடம் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்து வருகிறோம்.சரக்கு-சேவை வரி விதிப்பில் உள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சரக்கு-சேவை வரி விதிப்பில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு இன்னும் வழங்காமல் உள்ளது.

குண்டர் சட்டம் பாயும்
கருப்பு பூஞ்சை நோய் மருந்திற்கு சரக்கு-சேவை வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சில மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சரக்குகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் அந்த நிலை தொடர்ந்தால் வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்.

புதிய நடைமுறைகள்
பத்திரப் பதிவுத்துறையில் தற்போது பல புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. பத்திரம் பதிவு செய்த நாளிலேயே 90 சதவீத பத்திரங்களும் வழங்கப்படுகிறது.பத்திரம் பதிவு செய்த சில நாட்களிலேயே பட்டா மாற்றம் செய்யப்படும் உட்பிரிவு இருந்தால் அதற்கு தனியாக சர்வே செய்து ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story