கவர்னர் உரையில் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி


கவர்னர் உரையில் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 21 Jun 2021 7:25 AM GMT (Updated: 21 Jun 2021 7:25 AM GMT)

கவர்னர் உரையில் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.

இந்நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவர்னர் உரையில் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இல்லை. 

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்  என தேர்தல் நேரத்தில் திமுக கூறியது, தற்போது நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள், தற்போது மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறுகிறார்கள். 

கூட்டுறவு வங்களில் ரத்து செய்யப்பட்ட கடன்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை. வேளாண் பணிகளில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்  என திமுக கூறியது, கல்விக்கடன் தொடர்பாக கவர்னர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குரைக்கப்பட்டும் என தேர்தல் நேரத்தில் திமுக கூறியது, பெட்ரோல், டீசல் தொடர்பாக கவர்னர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. கொரோனா பரவலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் மறைக்கப்படுகின்றனர். 

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்கிற அளவில்தான் அவர்களது பேச்சு உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் தற்போதுள்ள நிலை

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story