தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 22 Jun 2021 9:13 PM GMT (Updated: 2021-06-23T02:43:54+05:30)

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 2-வது இடத்தை பெற்று, அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இந்த அவையில் அமர்ந்திருக்கிறது. வாக்கு வித்தியாசம் 3 சதவீதம்தான். ஆளுங்கட்சி செயல்பாட்டில் அபாயகரமான வளைவு வரும்போது, தேவையான இடங்களில் ‘பிரேக்' போடச் செய்வது எதிர்க்கட்சியின் வேலை. அதை நாங்கள் சரியாக செய்வோம்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 45 நாட்கள்தான் ஆகிறது. இப்போதே குறை சொல்லக்கூடாது. அதனால், உங்கள் பணி பாதிக்கக்கூடாது. ஆனாலும், கவர்னர் உரையில் இடம்பெறாத சிலவற்றை கூற விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில், முதியோருக்கு உதவித்தொகை ரூ.1,500 வழங்குவதாக சொன்னீர்கள். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறுனீர்கள்.

புதிதாக கடன் பெற முடியவில்லை

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக சொன்னீர்கள். சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தீர்கள். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4-ம் குறைப்பதாக சொன்னீர்கள். ஆனால், இவற்றில் ஒன்றுகூட கவர்னர் உரையில் இடம்பெறவில்லை.

கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அதற்கான ரசீதுகள் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படாததால், புதிதாக கடன் பெற முடியாத நிலை இருக்கிறது. தற்போது, கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கு பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

விலை குறைப்பு

கம்பி விலை, சிமெண்ட் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்த ஆட்சியில் அல்ல. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.425 ஆக இருந்த சிமெண்ட் மூட்டை விலை இப்போது ரூ.490 ஆக உயர்ந்தது. உடனடியாக, முதல்-அமைச்சர் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கடந்த 14-ந்தேதி சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்து, சிமெண்ட் விலையை குறைக்கச்சொல்லி பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு, ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.460 ஆக குறைந்தது. இந்த விலையை மேலும் குறைக்கக்கூறி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதற்கும் ஒப்புக்கொண்டனர். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். கம்பி விலை ரூ.1,180 குறைந்துள்ளது.

எனவே, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, குறைத்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளை அறிக்கை

தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என்று உறுப்பினர் இங்கே கூறுகிறார். தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக, அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. அப்போது, நீங்கள் (அ.தி.மு.க.), எங்கள் (தி.மு.க.) மீது சுமத்திய கடன் எவ்வளவு? என்பது தெரியவரும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றம்

தேர்தல் அறிக்கையில் சொன்னது, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று. ஆனால், சொல்லாமல் நிறைவேற்றியது, 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கியது.

எனவே, தமிழக பொருளாதாரத்தை இந்த அரசு படிப்படியாக உயர்த்தி, 5 ஆண்டுகளுக்குள் அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடன்பெற தடையில்லை

அவரைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசினார். அவர் கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், அதனால் புதிதாக கடன் பெற முடியவில்லை என்றும் உறுப்பினர் இங்கே கூறினார். 16 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் 12 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இதுவரை ரசீது வழங்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது. எனவே, புதிதாக கடன்பெற எந்த தடையும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story