வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவு ஜி.கே.மணி கோரிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பதில்


வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவு ஜி.கே.மணி கோரிக்கைக்கு மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 23 Jun 2021 11:13 PM GMT (Updated: 23 Jun 2021 11:13 PM GMT)

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி (பென்னாகரம்) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

கவர்னர் உரை 48 பக்கங்களில் 69 பத்தியாக இடம்பெற்றுள்ளது. சமூக நீதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு வித்திட்டவர் டாக்டர் ராமதாஸ். தமிழகம்தான் சமூக நீதியின் தொட்டில் ஆகும். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றாலும் தடை ஆணை இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

டாக்டர் ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள 20 சதவீதம் ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று நம்முடைய உறுப்பினர் ஜி.கே.மணி இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே, 2 நாட்களுக்கு முன்பு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இவர் மூலமாக ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார். அதிலே அவர் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இதனுடைய முக்கியத்துவத்தை, இதிலுள்ள பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி, நிறைவாகக் குறிப்பிடுகிறபோது, ‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும் கேட்டிருக்கிறார்.

ஆய்வு நடத்தி நல்ல முடிவு

நான் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து இங்கே சொல்ல விரும்புவது, ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கொரோனா தொற்றைக் குறைப்பதற்காக இரவு - பகல் பாராது கவனம் செலுத்தி, இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறோம்.

ஆகவே, உறுப்பினருடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜி.கே.மணி பேசியதாவது:-

நீட் தேர்வு

நீட் தேர்வு கூடாது என்பதில் எல்லா கட்சியினரும் உறுதியாக உள்ளோம். மற்ற படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கூடாது. சிறு துறைமுகங்கள் பிரச்சினை தொடர்பாக 9 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், நீட் தேர்வு விவகாரத்திலும் கடிதம் எழுத வேண்டும்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும். வருவாயைத் தவிர அரசுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை. எனவே, மதுவை ஒழிக்க வேண்டும். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டும் முடிவை எந்தச் சூழ்நிலையிலும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது:-

அரசியல் நடத்துகிறார்கள்

இந்த அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. முன்னாள் அரசும் அதில் திடமாகத்தான் இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியபோது, இந்த விஷயம் குறித்தும் அழுத்தமாக கூறினார். அப்போது, நீர்வளத்துறை மந்திரியை சந்திக்க பிரதமர் கூறினார். அதன் பிறகு, அவர் கூறியதை தன்னிடம் வந்து கூறும்படியும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகா அதைவைத்து பரபரப்பை ஏற்படுத்துகிறது. மேகதாது அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டது. அதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதையும் மீறி அணைகட்ட முடியாது. அதைவைத்து அரசியல் நடத்துகிறார்கள். அது உறுதியான திட்டம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story