தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி விடிய விடிய போராடிய இளம்பெண்; சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது வழக்கு


தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி விடிய விடிய போராடிய இளம்பெண்; சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jun 2021 5:18 AM IST (Updated: 24 Jun 2021 5:18 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி செங்கோட்டையில் இளம்பெண் விடிய விடிய நடத்திய போராட்டம் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவர் கடந்த 18-ந் தேதி ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வாங்கிக் கொண்டு தனது சித்தப்பா சின்னச்சாமி வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அப்போது, புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த புளியரை போலீசார், அரிசியை பறிமுதல் செய்ததுடன் பிரான்சிஸ் அந்தோணியை போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மகள் தொடர் போராட்டம்

இதையடுத்து பிரான்சிஸ் அந்தோணியின் 2-வது மகள் அபிதா (22) தனது தந்தைய தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்த செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அவர் கீழே இறங்கி வந்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக பிரான்சிஸ் அந்தோணி தனது குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, திடீரென்று அபிதா ஆஸ்பத்திரியின் மேல் தளத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார், அபிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர் வழக்குப்பதிவு செய்த ஆவணங்களை காட்டினால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்று கூறி தொடர்ந்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டார். அபிதாவின் தொடர் போராட்டம் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் புளியரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார்.

பரபரப்பு

பின்னர் இந்த ஆவணங்கள் அபிதாவிடம் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 3 மணி அளவில் தீயணைப்பு துறையினர் தண்ணீர் தொட்டி மீது ஏறி கயிறு கட்டி அபிதாவை கீழே இறக்கினார்கள்.

அப்போது, கீழே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அபிதாவின் அக்காள் ஜூலியுடன் சேர்ந்து அவர் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கு இருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.
1 More update

Next Story