திருச்சியில் இருந்து டெல்லி செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் விவசாயிகள் சாலை மறியல்; 120 பேர் கைது


திருச்சியில் இருந்து டெல்லி செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் விவசாயிகள் சாலை மறியல்; 120 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 9:05 PM GMT (Updated: 2021-07-21T02:35:05+05:30)

டெல்லி செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் திருச்சியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து பாதித்தால் அய்யாக்கண்ணுவிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர்.

திருச்சி,

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், இதுதொடர்பாக தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் மாவட்டத்திற்கு 4 விவசாயிகள் வீதம் 152 விவசாயிகள், திருச்சியில் ஒன்றுகூடி நேற்று டெல்லி புறப்பட திட்டமிடப்பட்டது. திருச்சி ஜங்ஷனில் இருந்து ரெயிலில் டெல்லி சென்று அங்கு நாளை (22-ந் தேதி) மத்திய வேளாண்துறை மந்திரி, நீர்வளத்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க கூடாது என மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

புதுடெல்லி செல்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் கூடினர். பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டு அண்ணாமலை நகர் திருச்சி-கரூர் பைபாஸ் சாலைக்கு ஏர்கலப்பை, மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் சகிதமாக காலை 8.30 மணிக்கு வந்தனர். அவர்களை போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர்.

சாலைமறியல்

இதனால் விவசாயிகள் அங்கு சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த வாகன ஓட்டிகள், அய்யாக்கண்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவரும் ஆவேசமாக பதில் பேசினார். இந்த போராட்டம் காரணமாக, திருச்சி-கரூர் பைபாஸ் சாலை களேபரமானது.

நிர்வாணமாக ஓடிய விவசாயி

இந்த நிலையில் பட்டை நாமம் போட்டபடி அரை நிர்வாணத்துடன் கூக்குரல் இட்டு போராடிய விவசாயி ஒருவர், யாரும் எதிர்பாராத வகையில் கைகளை உயர்த்தியபடி கோவணத்தை அவிழ்த்து வீசி நிர்வாணமாக ஓட தொடங்கினார். இதனை கண்டு பொதுமக்கள் முகம் சுளித்தனர். அவரை போலீசார் எச்சரித்து ஆடை அணியச்செய்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தால், நிலைமை மோசமானதை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். 5 பெண்கள் உள்பட 120 பேரை திருச்சி உறையூர் போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Next Story