மாநகராட்சியின் மேல்முறையீடு வழக்கு வாபஸ் கொரோனாவால் பலியான டாக்டரின் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு மறு அடக்கம்


மாநகராட்சியின் மேல்முறையீடு வழக்கு வாபஸ் கொரோனாவால் பலியான டாக்டரின் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு மறு அடக்கம்
x
தினத்தந்தி 22 July 2021 9:10 PM GMT (Updated: 22 July 2021 9:10 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னையை சேர்ந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். இவரது உடலை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அருகே உள்ள வேலாங்காடு சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து, வாகனங்களை தாக்கி, வன்முறையில் ஈடுபட்டனர்.

மனைவி வழக்கு

இதற்கிடையில், தன் கணவனின் உடலை வேலாங்காடு சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில், கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் மனைவி ஆனந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், டாக்டரின் உடலை தோண்டி எடுத்து, கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில், கிறிஸ்துவ முறைப்படி மறுஅடக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 31-ந்தேதி தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து ஒரு சுடுகாட்டில் இருந்து மற்றொரு சுடுகாட்டில் அடக்கம் செய்வது என்பது சாத்தியமில்லாதது என்று கூறப்பட்டு இருந்தது.

மேல்முறையீடு வழக்கு வாபஸ்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், தனி நீதிபதி உத்தரவின்படி, வேலாங்காடு சுடுகாட்டில் இருந்து டாக்டர் சைமன் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறுஅடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முதல்-அமைச்சரிடம்...

டாக்டர் சைமன் ஹெர்குலசின் மனைவி ஆனந்தி முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் உருக்கமாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள மாநகராட்சி மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை படித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் பேடியும் உடனடி நடவடிக்கையில் இறங்கினார். இதையடுத்து இந்த விவகாரத்தில் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு திரும்ப பெறப்பட்டது. இதன் மூலம் டாக்டர் சைமன் ஹேர்குலஸ் உடலை மறுஅடக்கம் செய்வதில் இருந்த தடை நீங்கியது.

15 மாதங்களுக்குப் பிறகு மறு அடக்கம்

இதைத்தொடர்ந்து டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடலை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை மறு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த தருணத்தில் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் மனைவி ஆனந்தி, மகள் டாக்டர் ஷைமி ஹெர்குலஸ், மருத்துவ கல்லூரி மாணவரான அவரது மகன் ஆண்டன் ஹெர்குலஸ் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி உள்ளனர்.

எங்கள் துயரத்தில் பங்கெடுத்து ஆறுதல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்.’ என்று தெரிவித்தனர்.

டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி அடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 15 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் மறு அடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story