ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி


ஏ.ஆர்.ரஹ்மானிடம் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 24 July 2021 7:06 AM GMT (Updated: 2021-07-24T12:36:29+05:30)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர், துபாயில் கடந்த 2000 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ஆனால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் நிகழ்ச்சி நடத்தியதில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், “இசை நிகழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சியின் காப்புரிமையை தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரஹமான் லாபம் அடைந்துள்ளார்” என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கெனவே இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, நிகழ்ச்சி லாபகரமாக இல்லை என்பதற்கு தான் பொறுப்பில்லை என்றும் தனக்கு பேசப்பட்ட தொகையை கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வழங்கவில்லை என்றும் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அவரது தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர், இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்சனை முடிந்துவிட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு ஏ.ஆர்.ரகுமான் தரப்பு வழக்கறிஞரிடம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஏ,ஆர்.ரகுமான் தரப்பு வழக்கறிஞர் எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உமாசங்கரும், தனக்கு மனுதராரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story