ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 July 2021 10:34 AM GMT (Updated: 2021-07-27T16:04:20+05:30)

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி. தற்போது, மின்துறை அமைச்சராக உள்ளார். இவர், 2011-2015ல் அ.தி.மு.க., அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாகக் கூறி, 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு விலக்களித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன் விசாரணைக்கு வந்தபோது செந்தில்பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார். குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களும் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து மற்ற இரண்டு வழக்குகளிலும் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கும்படியும் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்கமறுத்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 6ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Next Story