கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்கள் குறித்து விளம்பர பலகைகள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் விவரங்கள் குறித்து விளம்பர பலகைகள் வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பிராட்வே பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. அதற்காக 47 கோவில்களை தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பர பலகைகளும் வைக்க உள்ளோம். முதற்கட்டமாக வரும் வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளது.
அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியில் தகவல் பலகையில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Related Tags :
Next Story