நலவாரியத்தில் சேர்ந்தால் ரூ.5 ஆயிரம் தருவதாக விண்ணப்பம் வினியோகம் - தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்


நலவாரியத்தில் சேர்ந்தால் ரூ.5 ஆயிரம் தருவதாக விண்ணப்பம் வினியோகம் - தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 3 Oct 2021 10:44 PM GMT (Updated: 3 Oct 2021 10:44 PM GMT)

நலவாரியத்தில் சேர்ந்தால் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் எனக்கூறி உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க.வினர் விண்ணப்பம் வழங்கி வருவதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு 6-வது வார்டில் தி.மு.க.வினர் உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதாவது, நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்தால் ரூ.5 ஆயிரம் தருவதாக பொய்யான வாக்குறுதியை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விண்ணப்பம் வினியோகம்

அரசு அலுவலர்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்த்து ரூ.5 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் சின்னத்தை, தி.மு.க. தலைவர்கள் புகைப்படத்துடன் அச்சிட்டு தவறான நோக்கத்தோடு விண்ணப்பம் வினியோகம் செய்து வருகின்றனர்.

தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் உத்தரவின் பேரில் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தி.மு.க.வினர் பொதுமக்களிடம் பொய்யான உத்தரவாதத்தை அளித்து வருகின்றனர்.

தடுத்து நிறுத்த வேண்டும்

இதுபோன்ற பொய்யான தகவலை மக்களிடத்தில் பரப்புவதை உடனடியாக தடுத்து நிறுத்தி தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த புகாருக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, அரசின் பெயரை தவறாக பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படுபவர்கள் மீதும், இரு குழுவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் நபர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story